உலகத்திற்காக ஜெபிக்கிறோம் · சிலுவையின் நம்பிக்கையையும் உயிர்த்தெழுதலின் வல்லமையையும் பகிர்ந்துகொள்கிறோம் English தமிழ் ஜெபக் கோரிக்கை காணிக்கை
நகலெடுக்க, சேமிக்க அல்லது பகிர ஒரு வசனத்தைத் தேர்ந்தெடுங்கள்.

Psalms 62 text

1தேவனையே நோக்கி என் ஆத்துமா அமர்ந்திருக்கிறது: அவரால் என் இரட்சிப்பு வரும். 2அவரே என் கன்மலையும், என் இரட்சிப்பும், என் உயர்ந்த அடைக்கலமுமானவர்: நான் அதிகமாய் அசைக்கப்படுவதில்லை. 3நீங்கள் எதுவரைக்கும் ஒரு மனுஷனுக்குத் தீங்குசெய்ய நினைப்பீர்கள், நீங்கள் அனைவரும் சங்கரிக்கப்படுவீர்கள், சாய்ந்தமதிலுக்கும் இடிந்தசுவருக்கும் ஒப்பாவீர்கள். 4அவனுடைய மேன்மையிலிருந்து அவனைத் தள்ளும்படிக்கே அவர்கள் ஆலோசனைபண்ணி, அபத்தம்பேசவிரும்புகிறார்கள்: தங்கள் வாயினால் ஆசீர்வதித்து, தங்கள் உள்ளத்தில் சபிக்கிறார்கள். (சேலா.) 5என் ஆத்துமாவே, தேவனையே நோக்கி அமர்ந்திரு: நான் நம்புகிறது அவராலே வரும். 6அவரே என் கன்மலையும், என் இரட்சிப்பும், என் உயர்ந்த அடைக்கலமுமானவர்: நான் அசைக்கப்படுவதில்லை. 7என் இரட்சிப்பும், என் மகிமையும் தேவனிடத்தில் இருக்கிறது: பெலனான என் கன்மலையும் என் அடைக்கலமும் தேவனுக்குள் இருக்கிறது. 8ஜனங்களே, எக்காலத்திலும் அவரை நம்புங்கள்: அவர் சமுகத்தில் உங்கள் இருதயத்தை ஊற்றிவிடுங்கள்: தேவன் நமக்கு அடைக்கலமாயிருக்கிறார். (சேலா.) 9கீழ்மக்கள் மாயையும், மேன்மக்கள் பொய்யுமாமே: தராசிலே வைக்கப்பட்டால் அவர்களெல்லாரும் மாயையிலும் லேசானவர்கள். 10கொடுமையை நம்பாதிருங்கள்: கொள்ளையினால் பெருமைபாராட்டாதிருங்கள்: ஐசுவரியம் விருத்தியானால் இருதயத்தை அதின்மேல் வைக்காதேயுங்கள். 11தேவன் ஒருதரம் விளம்பினார், இரண்டுதரம் கேட்டிருக்கிறேன்: வல்லமை தேவனுடையது என்பதே. 12கிருபையும் உம்முடையது, ஆண்டவரே! தேவரீர் அவனவன் செய்கைக்குத் தக்கதாகப் பலனளிக்கிறீர்.

வேதவசனம்: தமிழ் வேதாகமம் (O.V.).