Psalms 45 text
1என் இருதயம் நல்ல விசேஷத்தினால் பொங்குகிறது: நான் ராஜாவைக்குறித்துப் பாடின கவியைச் சொல்லுகிறேன்: என் நாவு விரைவாய் எழுதுகிறவனுடைய எழுத்தாணி.
2எல்லா மனுபுத்திரரிலும் நீர் மகா சவுந்தரியமுள்ளவர்: உம்முடைய உதடுகளில் அருள் பொழிகிறது: ஆகையால் தேவன் உம்மை என்றென்றைக்கும் ஆசீர்வதிக்கிறார்.
3சவுரியவானே, உமது மகிமையும் உமது மகத்துவமுமாகிய உம்முடைய பட்டயத்தை நீர் உம்முடைய அரையிலே கட்டிக்கொண்டு,
4சத்தியத்தினிமித்தமும், நீதியுடன் கூடிய சாந்தத்தினிமித்தமும், உமது மகத்துவத்திலே ஜெயமாக ஏறிவாரும்: உமது வலதுகரம் பயங்கரமானவைகளை உமக்கு விளங்கப்பண்ணும்.
5உம்முடைய அம்புகள் கூர்மையானவைகள், அவைகள் ராஜாவுடைய சத்துருக்களின் இருதயத்திற்குள்பாயும்: ஜனசதளங்கள் உமக்குக் கீழே விழுவார்கள்.
6தேவனே, உமது சிங்காசனம் என்றென்றைக்குமுள்ளது, உமது ராஜ்யத்தின் செங்கோல் நீதியுள்ள செங்கோலாயிருக்கிறது.
7நீர் நீதியை விரும்பி, அக்கிரமத்தை வெறுக்கிறீர்: ஆதலால் தேவனே, உம்முடைய தேவன் உமது தோழரைப்பார்க்கிலும் உம்மை ஆனந்ததைலத்தினால் அபிஷேகம்பண்ணினார்.
8தந்தத்தினால் செய்த அரமனைகளிலிருந்து புறப்படுகையில், நீர் மகிழும்படி உமது வஸ்திரங்களெல்லாம் வெள்ளைப்போளம் சந்தனம் லவங்கம் இவைகளின் வாசனை பொருந்தியதாயிருக்கிறது.
9உமது நாயகிகளுக்குள்ளே அரசரின் குமாரத்திகளுண்டு: ராஜஸ்திரீ ஓப்பீரின் தங்கம் அணிந்தவளாய் உமது வலதுபாரிசத்தில் நிற்கிறாள்.
10குமாரத்தியே கேள், நீ உன் செவியைச் சாய்த்துச் சிந்தித்துக்கொள், உன் ஜனத்தையும் உன் தகப்பன் வீட்டையும் மறந்துவிடு.
11அப்பொழுது ராஜா உன் அழகில் பிரியப்படுவார்: அவர் உன் ஆண்டவர், ஆகையால் அவரைப் பணிந்துகொள்.
12தீரு குமாரத்தி காணிக்கை கொண்டுவருவாள்: ஜனங்களில் ஐசுவரியவான்களும் உன் தயவை நாடி வணங்குவார்கள்.
13ராஜகுமாரத்தி உள்ளாகப் பூரணமகிமையுள்ளவள், அவள் உடை பொற்சரிகையாயிருக்கிறது.
14சித்திரத்தையலாடை தரித்தவளாய், ராஜாவினிடத்தில் அழைத்துக் கொண்டுவரப்படுவாள்: அவள் பின்னாலே செல்லும் அவளுடைய தோழிகளாகிய கன்னிகைகள் உம்மிடத்தில் கூட்டிக்கொண்டுவரப்படுவார்கள்.
15அவர்கள் மகிழ்ச்சியோடும் களிப்போடும் வந்து, ராஜ அரமனைக்குள் பிரவேசிப்பார்கள்.
16உமது பிதாக்களுக்குப் பதிலாக உமது குமாரர் இருப்பார்கள்: அவர்களைப் பூமியெங்கும் பிரபுக்களாகவைப்பீர்.
17உமது நாமத்தை எல்லாத் தலைமுறைகளிலும் பிரஸ்தாபப்படுத்துவேன், இதினிமித்தம் ஜனங்கள் உம்மை என்றென்றைக்குமுள்ள சதா காலங்களிலும் துதிப்பார்கள்.
வேதவசனம்: தமிழ் வேதாகமம் (O.V.).