Proverbs 14 text
1புத்தியுள்ள ஸ்திரீ தன் வீட்டைக் கட்டுகிறாள்: புத்தியில்லாத ஸ்திரீயோ தன் கைகளினால் அதை இடித்துப்போடுகிறாள்.
2நிதானமாய் நடக்கிறவன் கர்த்தருக்குப் பயப்படுகிறான்: தன் வழிகளில் தாறுமாறானவனோ அவரை அலட்சியம்பண்ணுகிறான்.
3மூடன் வாயிலே அவன் அகந்தைக்கேற்ற மிலாறுண்டு: ஞானவான்களின் உதடுகளோ அவர்களைக் காப்பாற்றும்.
4எருதுகளில்லாத இடத்தில் களஞ்சியம் வெறுமையாயிருக்கும்: காளைகளின் பெலத்தினாலோ மிகுந்த வரத்துண்டு.
5மெய்ச்சாட்சிக்காரன் பொய்சொல்லான்: பொய்ச்சாட்சிக்காரனோ பொய்களை ஊதுகிறான்.
6பரியாசக்காரன் ஞானத்தைத் தேடியும் கண்டுபிடியான்: புத்தியுள்ளவனுக்கோ அறிவு லேசாய் வரும்.
7மூடனுடைய முகத்துக்கு விலகிப்போ: அறிவுள்ள உதடுகளை அங்கே காணாய்.
8தன் வழியைச் சிந்தித்துக்கொள்வது விவேகியின் ஞானம்: மூடர்களுடைய வஞ்சனையோ மூடத்தனம்.
9மூடர் பாவத்தைக்குறித்துப் பரியாசம்பண்ணுகிறார்கள்: நீதிமான்களுக்குள்ளே தயை உண்டு.
10இருதயத்தின் கசப்பு இருதயத்திற்கே தெரியும்: அதின் மகிழ்ச்சிக்கு அந்நியன் உடந்தையாகான்.
11துன்மார்க்கனுடைய வீடு அழியும்: செம்மையானவனுடைய கூடாரமோ செழிக்கும்.
12மனுஷனுக்குத் செம்மையாய்த் தோன்றுகிறவழி உண்டு: அதின் முடிவோ மரண வழிகள்.
13நகைப்பிலும் மனதுக்குத் துக்கமுண்டு: அந்த மகிழ்ச்சியின் முடிவு சஞ்சலம்.
14பின்வாங்கும் இருதயமுள்ளவன் தன் வழிகளிலேயும்: நல்ல மனுஷனோ தன்னிலே தானும் திருப்தியடைவான்.
15பேதையானவன் எந்த வார்த்தையையும் நம்புவான்: விவேகியோ தன் நடையின்மேல் கவனமாயிருக்கிறான்.
16ஞானமுள்ளவன் பயந்து தீமைக்கு விலகுகிறான்: மதியீனனோ மூர்க்கங்கொண்டு துணிகரமாயிருக்கிறான்.
17முற்கோபி மதிகேட்டைச் செய்வான்: துர்ச்சிந்தனைக்காரன் வெறுக்கப்படுவான்.
18பேதையர் புத்தியீனத்தைச் சுதந்தரிக்கிறார்கள்: விவேகிகளோ அறிவினால் முடிசூட்டப்படுகிறார்கள்.
19தீயோர் நல்லோருக்கு முன்பாகவும், துன்மார்க்கர் நீதிமான்களுடைய வாசற்படிகளிலும் குனிவதுண்டு.
20தரித்திரன் தனக்கடுத்தவனாலும் பகைக்கப்படுகிறான்: ஐசுவரியவானுக்கோ அநேக சிநேகிதருண்டு.
21பிறனை அவமதிக்கிறவன் பாவஞ்செய்கிறான்: தரித்திரனுக்கு இரங்குகிறவனோ பாக்கியமடைவான்.
22தீமையை யோசிக்கிறவர்கள் தவறுகிறார்களல்லவோ? நன்மையை யோசிக்கிறவர்களுக்கோ கிருபையும் சத்தியமுமுண்டு.
23சகல பிரயாசத்தினாலும் பிரயோஜனமுண்டு: உதடுகளின் பேச்சோ வறுமையை மாத்திரம் தரும்.
24ஞானிகளுக்கு முடி அவர்கள் செல்வம்: மூடரின் மதியீனம் மூடத்தனமே.
25மெய்ச்சாட்சி சொல்லுகிறவன் உயிர்களை இரட்சிக்கிறான்: வஞ்சனைக்காரனோ பொய்களை ஊதுகிறான்.
26கர்த்தருக்குப் பயப்படுகிறவனுக்குத் திடநம்பிக்கை உண்டு: அவன் பிள்ளைகளுக்கும் அடைக்கலம் கிடைக்கும்.
27கர்த்தருக்குப் பயப்படுதல் ஜீவஊற்று: அதினால் மரணக்கண்ணிகளுக்குத் தப்பலாம்.
28ஜனத்திரட்சி ராஜாவின் மகிமை: ஜனக்குறைவு தலைவனின் முறிவு.
29நீடிய சாந்தமுள்ளவன் மகாபுத்திமான்: முற்கோபியோ புத்தியீனத்தை விளங்கப்பண்ணுகிறான்.
30சொஸ்தமனம் உடலுக்கு ஜீவன்: பொறாமையோ எலும்புருக்கி.
31தரித்திரனை ஒடுக்குகிறவன் அவனை உண்டாக்கினவரை நிந்திக்கிறான்: தரித்திரனுக்குத் தயை செய்கிறவனோ அவரைக் கனம்பண்ணுகிறான்
32துன்மார்க்கன் தன் தீமையிலே வாரிக்கொள்ளப்படுவான்: நீதிமானோ தன் மரணத்திலே நம்பிக்கையுள்ளவன்.
33புத்திமானுடைய இருதயத்தில் ஞானம் தங்கும் மதியீனரிடத்தில் உள்ளதோ வெளிப்படும்.
34நீதி ஜனத்தை உயர்த்தும்: பாவமோ எந்த ஜனத்துக்கும் இகழ்ச்சி.
35ராஜாவின் தயை விவேகமுள்ள பணிவிடைக்காரன்மேலிருக்கும்: அவனுடைய கோபமோ இலச்சையுண்டாக்குகிறவன்மேலிருக்கும்.
வேதவசனம்: தமிழ் வேதாகமம் (O.V.).