1 Samuel 6 text
1கர்த்தரின் பெட்டி பெலிஸ்தரின் தேசத்தில் ஏழுமாதம் இருந்தது.
2பின்பு பெலிஸ்தர் பூசாரிகளையும் குறிசொல்லுகிறவர்களையும் அழைப்பித்து கர்த்தருடைய பெட்டியைப்பற்றி நாங்கள் என்ன செய்யவேண்டும்? அதை நாங்கள் எவ்விதமாய் அதின் ஸ்தானத்திற்கு அனுப்பிவிடலாம் என்று எங்களுக்குச் சொல்லுங்கள் என்றார்கள்.
3அதற்கு அவர்கள் இஸ்ரவேலின் தேவனுடைய பெட்டியை நீங்கள் அனுப்பினால், அதை வெறுமையாய் அனுப்பாமல், குற்றநிவாரண காணிக்கையை எவ்விதத்திலும் அவருக்குச் செலுத்தவேண்டும். அப்பொழுது நீங்கள் சொஸ்தமடைகிறதுமல்லாமல், அவருடைய கை உங்களை விடாதிருந்த முகாந்தரம் இன்னதென்றும் உங்களுக்குத் தெரியவரும் என்றார்கள்.
4அதற்கு அவர்கள் குற்றநிவாரண காணிக்கையாக நாங்கள் அவருக்கு என்னத்தைச் செலுத்தவேண்டுமென்று கேட்டதற்கு, அவர்கள் உங்களெல்லாருக்கும் உங்கள் அதிபதிகளுக்கும் ஒரே வாதையுண்டானபடியால், பெலிஸ்தருடைய அதிபதிகளின் இலக்கத்திற்குச் சரியாக மூலவியாதியின் சாயலானபடி செய்த ஐந்து பொன் சுரூபங்களும், பொன்னினால் செய்த ஐந்து சுண்டெலிகளும் செலுத்த வேண்டும்.
5ஆகையால் உங்கள் மூலவியாதியின் சாயலான சுரூபங்களையும், உங்கள் தேசத்தைக் கெடுத்துப்போட்ட சுண்டெலிகளின் சாயலான சுரூபங்களையும் நீங்கள் உண்டுபண்ணி, இஸ்ரவேலின் தேவனுக்கு மகிமையைச் செலுத்துங்கள். அப்பொழுது ஒருவேளை உங்கள்மேலும், உங்கள் தேவர்கள்மேலும், உங்கள் தேசத்தின்மேலும் இறங்கியிருக்கிற அவருடைய கை உங்களைவிட்டு விலகும்.
6எகிப்தியரும் பார்வோனும் தங்கள் இருதயத்தைக் கடினப்படுத்தினதுபோல, நீங்கள் உங்கள் இருதயத்தைக் கடினப்படுத்துவானேன். அவர்களை அவர் தீங்காய் வாதித்த பின்பு, ஜனங்களை அவர்கள் அனுப்பிவிட்டதும் அவர்கள் போய்விட்டதும் இல்லையோ?
7இப்பொழுதும் நீங்கள் ஒரு புதுவண்டில் செய்து, நுகம் பூட்டப்படாதிருக்கிற இரண்டு கறவைப்பசுக்களைப் பிடித்து, அவைகளை வண்டிலிலே கட்டி, அவைகளின் கன்றுக் குட்டிகளை அவைகளுக்குப் பின்னாகப்போகவிடாமல், வீட்டிலே கொண்டுவந்து விட்டு,
8பின்பு கர்த்தருடைய பெட்டியை எடுத்து, அதை வண்டிலின்மேல் வைத்து, நீங்கள் குற்றநிவாரணகாணிக்கையாக அவருக்குச் செலுத்தும் பொன்னுருப்படிகளை அதின் பக்கத்தில் ஒரு சிறிய பெட்டியிலே வைத்து, அதை அனுப்பி விடுங்கள்.
9அப்பொழுது பாருங்கள். அது தன் எல்லைக்குப் போகிறவழியாய்ப் பெத்ஷிமேசுக்குப் போனால், இந்தப் பெரிய தீங்கை நமக்குச் செய்தவர் அவர்தாமே என்று அறியலாம். போகாதிருந்தால், அவருடைய கை நம்மைத் தொடாமல், அது தற்செயலாய் நமக்கு நேரிட்டது என்று அறிந்து கொள்ளலாம் என்றார்கள்.
10அந்த மனுஷர் அப்படியே செய்து, இரண்டு கறவைப்பசுக்களை அங்கே கொண்டு வந்து, அவைகளை வண்டிலிலே கட்டி, அவைகளின் கன்றுக்குட்டிகளை வீட்டிலே அடைத்துவைத்து,
11கர்த்தருடைய பெட்டியையும், பொன்னால் செய்த சுண்டெலிகளும் தங்கள் மூலவியாதியின் சாயலான சுரூபங்களும் வைத்திருக்கிற சிறிய பெட்டியையும் அந்த வண்டிலின்மேல் வைத்தார்கள்.
12அப்பொழுது அந்தப் பசுக்கள் பெத்ஷிமேசுக்குப் போகிற வழியிலே செம்மையாகப்போய், வலது இடது பக்கமாய் விலகாமல், பெரும்பாதையான நேர்வழியாகக் கூப்பிட்டுக்கொண்டே நடந்தது. பெலிஸ்தரின் அதிபதிகள் பெத்ஷிமேசின் எல்லைமட்டும் அவைகளின் பிறகே போனார்கள்.
13பெத்ஷிமேசின் மனுஷர் பள்ளத்தாக்கிலே கோதுமை அறுப்பு அறுத்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் தங்கள் கண்களை ஏறெடுக்கும்போது, பெட்டியைக் கண்டு, அதைக் கண்டதினால் சந்தோசப்பட்டார்கள்.
14அந்த வண்டில் பெத்ஷிமேஸ் ஊரானாகிய யோசுவாவின் வயலில் வந்து, அங்கே நின்றது. அங்கே ஒரு பெரிய கல்லிருந்தது. அப்பொழுது வண்டிலின் மரங்களைப் பிளந்து, பசுக்களைக் கர்த்தருக்குச் சர்வாங்கதகன பலியாகச் செலுத்தினார்கள்.
15லேவியர் கர்த்தருடைய பெட்டியையும், அதனோடிருந்த பொன்னுருப்படிகளுள்ள சிறிய பெட்டியையும் இறக்கி, அந்தப் பெரிய கல்லின்மேல் வைத்தார்கள். பெத்ஷிமேசின் மனுஷர் அன்றையதினம் கர்த்தருக்குச் சர்வாங்கதகனங்களைச் செலுத்திப் பலிகளை இட்டார்கள்.
16பெலிஸ்தரின் ஐந்து அதிபதிகளும் இவைகளைக்கண்டு, அன்றையதினம் எக்ரோனுக்குத் திரும்பிப்போனார்கள்.
17பெலிஸ்தர் குற்றநிவாரணத்துக்காக கர்த்தருக்குச் செலுத்தின மூலவியாதியின் சாயலான பொன் சுரூபங்களாவன, அஸ்தோத்திற்காக ஒன்று, காசாவுக்காக ஒன்று, அஸ்கலோனுக்காக ஒன்று, காத்துக்காக ஒன்று, எக்ரோனுக்காக ஒன்று.
18பொன்னால் செய்த சுண்டெலிகளோவென்றால், அரணான பட்டணங்கள் துவக்கி நாட்டிலுள்ள கிராமங்கள்மட்டும், கர்த்தருடைய பெட்டியை வைத்த பெரிய கல் இருக்கிற ஆபேல்மட்டும், ஐந்து அதிபதிகளுக்கும் ஆதீனமாயிருக்கிற பெலிஸ்தருடைய சகல ஊர்களின் இலக்கத்திற்குச் சரியாயிருந்தது. அந்தக் கல் இந்நாள் வரைக்கும் பெத்ஷிமேஸ் ஊரானாகிய யோசுவாவின் வயலில் இருக்கிறது.
19ஆனாலும் பெத்ஷிமேசின் மனுஷர் கர்த்தருடைய பெட்டிக்குள் பார்த்தபடியினால், கர்த்தர் ஜனங்களில் ஐம்பதினாயிரத்து எழுபது பேரை அடித்தார். அப்பொழுது கர்த்தர் ஜனங்களைப் பெரிய சங்காரமாக அடித்ததினிமித்தம், ஜனங்கள் துக்கித்துக் கொண்டிருந்தார்கள்.
20இந்தப் பரிசுத்தமான தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக நிற்கத்தக்கவன் யார்? பெட்டி நம்மிடத்திலிருந்து யாரிடத்துக்குப் போகும் என்று பெத்ஷிமேசின் மனுஷர் சொல்லி,
21கீரியாத்யாரீமின் குடிகளுக்கு ஆட்களை அனுப்பி பெலிஸ்தர் கர்த்தருடைய பெட்டியைத் திரும்ப அனுப்பினார்கள். நீங்கள் வந்து, அதை உங்களிடத்துக்கு எடுத்துக்கொண்டு போங்கள் என்று சொல்லச் சொன்னார்கள்
வேதவசனம்: தமிழ் வேதாகமம் (O.V.).