Zechariah 6 text
1நான் திரும்பவும் கண்களை ஏறெடுத்து, இதோ, இரண்டு பர்வதங்களின் நடுவாகப் புறப்பட்டுவருகிற நாலு இரதங்களைக் கண்டேன். அந்தப் பர்வதங்கள் வெண்கலப் பர்வதங்களாயிருந்தன.
2முதலாம் இரதத்தில் சிவப்புக் குதிரைகளும், இரண்டாம் இரதத்தில் கறுப்புக் குதிரைகளும்,
3மூன்றாம் இரதத்தில் வெள்ளைக் குதிரைகளும், நான்காம் இரதத்தில் புள்ளிப்புள்ளியான சிவப்புக் குதிரைகளும் பூட்டியிருந்தன.
4நான் என்னோடே பேசின தூதனை நோக்கி ஆண்டவனே, இவைகள் என்னவென்று கேட்டேன்.
5அந்தத் தூதன் எனக்குப் பிரதியுத்தரமாக இவைகள் சர்வலோகத்துக்கும் ஆண்டவராயிருக்கிறவருடைய சமுகத்தில் நின்று புறப்படுகிற வானத்தினுடைய நாலு ஆவிகள் என்றார்.
6ஒன்றில் பூட்டப்பட்டிருந்த கறுப்புக் குதிரைகள் வடதேசத்துக்குப் புறப்பட்டுப் போயின. வெண்மையான குதிரைகள் அவைகளின் பின்னாலே புறப்பட்டுப் போயின. புள்ளி புள்ளியான குதிரைகள் தென்தேசத்துக்குப் புறப்பட்டுப் போயின.
7சிவப்புக் குதிரைகளோ வென்றால் புறப்பட்டுப்போய், பூமியிலே சுற்றித் திரியும்படி கேட்டுக் கொண்டன. அதற்கு அவர் போய்ப் பூமியிலே சுற்றித் திரியுங்கள் என்றார். அப்படியே பூமியில் சுற்றித் திரிந்தன.
8பின்பு அவர் என்னைக் கூப்பிட்டு பார், வடதேசத்துக்குப் புறப்பட்டுப் போனவைகள், வடதேசத்திலே என் கோபத்தைச் சாந்திபண்ணிற்று என்று என்னோடே சொன்னார்.
9பின்பு கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்
10சிறையிருப்பின் மனுஷராகிய எல்தாயும், தொபியாவும், யெதாயாவும் பாபிலோனிலிருந்து வந்திருக்கும் அந்நாளிலே நீ போய், செப்பனியாவின் குமாரனாகிய யோசியாவின் வீட்டுக்குள் பிரவேசித்து,
11அங்கே அவர்கள் கையிலே வெள்ளியையும் பொன்னையும் வாங்கி, கிரீடங்களைச் செய்வித்து, யோத்சதாக்கின் குமாரனாகிய யோசுவா என்னும் பிரதான ஆசாரியனுடைய சிரசிலே வைத்து,
12அவனோடே சொல்லவேண்டியது சேனைகளின் கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால், இதோ, ஒரு புருஷன், அவருடைய நாமம் கிளை என்னப்படும். அவர் தம்முடைய ஸ்தானத்திலிருந்து முளைத்தெழும்பிக் கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டுவார்.
13அவரே கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டுவார். அவர் மகிமை பொருந்தினவராய் தம்முடைய சிங்காசனத்தின்மேல் வீற்றிருந்து ஆளுகை செய்வார். தம்முடைய சிங்காசனத்தின்மேல் ஆசாரியராயும் இருப்பார். இவ்விரண்டின் நடுவாகச் சமாதானத்தின் ஆலோசனை விளங்கும்.
14இந்தக் கிரீடங்களோவென்றால், கர்த்தருடைய ஆலயத்திலே, ஏலேமுக்கும், தொபியாவுக்கும், யெதாயாவுக்கும், செப்பனியாவின் குமாரனாகிய ஏனுக்கும் நினைப்பூட்டுதலுக்கென்று வைக்கப்படுவதாக.
15தூரத்திலுள்ளவர்கள் வந்து கர்த்தருடைய ஆலயத்தைக் கூட இருந்து கட்டுவார்கள். அப்பொழுது சேனைகளின் கர்த்தர் என்னை உங்களிடத்திற்கு அனுப்பினாரென்று அறிந்து கொள்வீர்கள். நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தரின் சத்தத்தைக் கேட்டு நடந்தீர்களானால் இது நிறைவேறும் என்று சொல் என்றார்.
வேதவசனம்: தமிழ் வேதாகமம் (O.V.).