Micah 4 text
1ஆனாலும் கடைசி நாட்களில் கர்த்தருடைய ஆலயமாகிய பர்வதம் பர்வதங்களின் கொடுமுடியில் ஸ்தாபிக்கப்பட்டு, மலைகளுக்கு மேலாய் உயர்த்தப்பட்டிருக்கும், எல்லா ஜாதிகளும் அதனிடத்திற்கு ஓடி வருவார்கள்.
2திரளான ஜாதிகள் புறப்பட்டு வந்து நாம் கர்த்தரின் பர்வதத்துக்கும், யாக்கோபின் தேவனுடைய ஆலயத்துக்கும் போவோம் வாருங்கள். அவர் தமது வழிகளை எமக்குப் போதிப்பார், நாம் அவர் பாதைகளில் நடப்போம் என்பார்கள். ஏனெனில் சீயோனிலிருந்து வேதமும், எருசலேமிலிருந்து கர்த்தரின் வசனமும் வெளிப்படும்.
3அவர் திரளான ஜனங்களுக்குள் நியாயந்தீர்த்து, தூரத்திலுள்ள பலத்த ஜாதிகளைக் கடிந்துகொள்ளுவார். அப்பொழுது அவர்கள் தங்கள் பட்டயங்களை மண்வெட்டிகளாகவும், தங்கள் ஈட்டிகளை அரிவாள்களாகவும் அடிப்பார்கள். ஒரு ஜாதிக்கு விரோதமாய் மறு ஜாதி பட்டயம் எடுப்பதில்லை. இனி அவர்கள் யுத்தத்தைக் கற்பதுமில்லை.
4அவனவன் தன்தன் திராட்சச்செடியின் நிழலிலும், தன்தன் அத்திமரத்தின் நிழலிலும் பயப்படுத்துவார் இல்லாமல் உட்காருவான். சேனைகளுடைய கர்த்தரின் வாய் இதைச் சொல்லிற்று.
5சகல ஜனங்களும் தங்கள் தங்கள் தேவனுடைய நாமத்தைப்பற்றிக் கொண்டு நடப்பார்கள். நாங்களும் எங்கள் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைப்பற்றிக்கொண்டு என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் நடப்போம்.
6கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால் அந்நாளிலே நான் நொண்டி யானவளைச் சேர்த்து, தள்ளுண்டவளையும் தீங்கு அனுபவித்தவளையும் கூட்டிக்கொண்டு,
7நொண்டியானவளை மீதியான ஜனமாகவும், தூரமாய்த் தள்ளுண்டு போனவளைப் பலத்த ஜாதியாகயும் வைப்பேன். அவர்கள்பேரில் கர்த்தர் சீயோன் பர்வதத்திலே இதுமுதல் என்றென்றைக்கும் ராஜாவாயிருப்பார்.
8மந்தையின் துருக்கமே, சீயோன் குமாரத்தியின் அரணே, முந்தின ஆளுகை உன்னிடத்தில் வரும். ராஜரிகம் எருசலேம் குமாரத்தியினிடத்தில் வரும்.
9இப்பொழுதும் நீ சத்தமிட்டுக் கதறுவானேன்? ராஜாவானவர் உன்னிடத்தில் இல்லையோ? உன் ஆலோசனைக்காரர் அழிந்து போனார்களோ? பிரசவிக்கிற ஸ்திரிக்கு ஒத்தவேளை உனக்கு உண்டாகும்.
10சீயோன் குமாரத்தியே, பிரசவ ஸ்திரியைப்போல அம்பாயப்பட்டு வேதனைப்படு. நீ இப்பொழுது நகரத்திலிருந்து புறப்பட்டு, வெளிகளில் தங்கி, பாபிலோன் வரைக்கும் போவாய், அங்கே விடுவிக்கப்படுவாய். அங்கே கர்த்தர் உன்னை உன் சத்துருக்களின் கைக்கு நீக்கலாக்கி மீட்பார்.
11சீயோன் தீட்டுப்படுவாளாக, எங்கள் கண் அவளைக் காண்பதாக என்று சொல்லி, அநேக ஜாதியார் உனக்கு விரோதமாகக் கூடியிருக்கிறார்கள்.
12ஆனாலும் அவர்கள் கர்த்தருடைய நினைவுகளை அறியாமலும், அவருடைய யோசனையை உணராமலும் இருக்கிறார்கள். அவர் அரிக்கட்டுகளைப்போல அவர்களைக் களத்திலே சேர்ப்பார்.
13சீயோன் குமாரத்தியே, நீ எழுந்து போரடி. நான் உன் கொம்புகளை இரும்பும், உன் குளம்புகளை வெண்கலமுமாக்குவேன். நீ அநேக ஜனங்களை நொறுக்கிப்போடுவாய். அவர்கள் தேடிச் சேர்த்ததை நீ கர்த்தருக்கென்றும், அவர்களுடைய ஆஸ்தியைப் பூமிக்கெல்லாம் ஆண்டவராயிருக்கிறவருக்கென்றும் நியமிப்பாய்.
வேதவசனம்: தமிழ் வேதாகமம் (O.V.).