2 Samuel 8 text
1இதற்குப்பின் தாவீது பெலிஸ்தரை முறிய அடித்து, அவர்களைக் கீழ்ப்படுத்தி, மேத்தேக் அம்மாவைப் பிடித்துக் கொண்டான்.
2அவன் மோவாபியரையுமும் முறிய அடித்து, அவர்களைத் தரைமட்டும் பணியப் பண்ணி, அவர்கள்மேல் நூல் போட்டு,இரண்டு பங்கு மனுஷரைக் கொன்றுபோட்டு, ஒருபங்கை உயிரோடே வைத்தான். இவ்விதமாய் மோவாபியர் தாவீதைச் சேவித்து, அவனுக்குக் கப்பங் கட்டுகிறவர்களானார்கள்.
3ரேகோபின் குமாரனாகிய ஆதாதேசர் என்னும் சோபாவின் ராஜா ஐபிராத்து நதியண்டையில் இருக்கிற சீமையைத் திரும்பத் தன்வசமாக்கிக்கொள்ளப் போகையில், தாவீது அவனையும் முறிய அடித்து,
4அவனுக்கு இருந்த இராணுவத்தில் ஆயிரத்து எழுநூறு குதிரைவீரரையும், இருபதினாயிரம் காலாட்களையும் பிடித்து, இரதங்களில் நூறு இரதங்களை வைத்துக்கொண்டு, மற்றவைகளையெல்லாம் துண்டாடிப்போட்டான்.
5சோபாவின் ராஜாவாகிய ஆதாதேசருக்கு உதவிசெய்ய தமஸ்குப் பட்டணத்தாராகிய சீரியர் வந்தார்கள். தாவீது சீரியரில் இருபத்தீராயிரம் பேரை வெட்டிப்போட்டு,
6தமஸ்குக்கடுத்த சீரியாவிலே தாணையங்களை வைத்தான். சீரியர் தாவீதைச் சேவித்து, அவனுக்குக் கப்பங் கட்டினார்கள். தாவீது போன இடத்திலெல்லாம், கர்த்தர் அவனைக் காப்பாற்றினார்.
7ஆதாதேசரின் சேவகருடைய பொற்பரிசைகளைத் தாவீது எடுத்து, அவைகளை எருசலேமுக்குக் கொண்டுவந்தான்.
8ஆதாதேசரின் பட்டணங்களாகிய பேத்தாகிலும் பேரொத்தாயிலுமிருந்து தாவீது ராஜா மகா திரளான வெண்கலத்தையும் எடுத்துக்கொண்டு வந்தான்.
9தாவீது ஆதாதேசருடைய எல்லா இராணுவத்தையும் முறிய அடித்த செய்தியை ஆமாத்தின் ராஜாவாகிய தோயீ கேட்டபோது,
10ஆதாதேசர் தோயீயின்மேல் எப்போதும் யுத்தம்பண்ணிக்கொண்டிருந்தபடியால், ராஜாவாகிய தாவீதின் சுகசெய்தியை விசாரிக்கவும், அவன் ஆதாதேசரோடே யுத்தம்பண்ணி,அவனை முறிய அடித்ததற்காக அவனுக்கு வாழ்த்துதல் சொல்லவும், தோயீ தன் குமாரனாகிய யோராமை ராஜாவினிடத்தில் அனுப்பினான். மேலும் யோராம் தன் கையிலே வெள்ளியும் பொன்னும் வெண்கலமுமான தட்டுமுட்டுக்களைக் கொண்டு வந்தான்.
11அவன் கொண்டுவந்தவைகளைத் தாவீதுராஜா கீழ்ப்படுத்தின சீரியர், மோவாபியர், அம்மோன்புத்திரர், பெலிஸ்தர், அமலேக்கியர் என்னும் சகல ஜாதியார்களிடத்திலும்,
12ரேகோபின் குமாரனாகிய ஆதாதேசர் என்னும் சோபாவின் ராஜாவினிடத்திலும் கொள்ளையிட்டதிலும் எடுத்து,கர்த்தருக்கு நியமித்த வெள்ளியோடும் பொன்னோடும் கூடக் கர்த்தருக்குப் பிரதிஷ்டைபண்ணினான்.
13தாவீது உப்புப்பள்ளத்தாக்கிலே பதினெண்ணாயிரம் சீரியரை முறிய அடித்துத் திரும்பினதினால் கீர்த்திபெற்றான்.
14ஏதோமில் தாணையங்களை வைத்தான். ஏதோம் எங்கும் அவன் தாணையங்களை வைத்ததினாலே, ஏதோமியர் எல்லாரும் தாவீதைச் சேவிக்கிறவர்களானார்கள். தாவீது போன எல்லா இடத்திலும் கர்த்தர் அவனைக் காப்பாற்றினார்.
15இப்படியே தாவீது இஸ்ரவேல் அனைத்தின்மேலும் ராஜாவாயிருந்தான். அவன் தன்னுடைய எல்லா ஜனத்திற்கும் நியாயமும் நீதியும் செய்துவந்தான்.
16செருயாவின் குமாரனாகிய யோவாப் இராணுவத் தலைவனாயிருந்தான். அகிலூதின் குமாரனாகிய யோசபாத் மந்திரியாயிருந்தான்.
17அகிதூபின் குமாரன் சாதோக்கும், அபியத்தாரின் குமாரன் அகிமெலேக்கும் ஆசாரியராயிருந்தார்கள். செராயா சம்பிரதியாயிருந்தான்.
18யோய்தாவின் குமாரன் பெனாயா கிரேத்தியருக்கும் பிலேத்தியருக்கும் தலைவனாயிருந்தான். தாவீதின் குமாரரோ பிரதானிகளாயிருந்தார்கள்.
வேதவசனம்: தமிழ் வேதாகமம் (O.V.).